Wednesday, February 2, 2011


நானுணர்ந்தத்  தாய்மையெனும் தவசி...
என் அன்னை சானு !

இரண்டெழுத்தில் ஓர் உலகம்!
தன் தாயை இருக்கப் பிடித்துத்தவழும்
தளிர் பிள்ளையை  விடவும் கூட
ஒருபிடி சுகம்
அதிகம் எழும் என்மனதிற்குள்ளாக -
அவளை நினைத்தமாத்திரத்தில்...!

எழுதும் தமிழில் சுகமளிக்க எழுதவில்லை இதனை!
எனக்குள்ளாக...எனக்கு மட்டுமாய்
எத்தனையோ முறை
இச்சுகம் கண்டு பூரித்தவன் நான்!

மகரந்த மழையில்
நனைந்த வண்டென
மயக்க நிலையில் நான்
உறக்கம் கலைந்ததும்
கலையாத கனவு போல்
இன்றும் கூடச் சில நினைவுகள்...!

எத்தனை முறை வாசித்தாலும்
முடிவதையும் இல்லை
திகட்டுவதாயும் இல்லை...!
சிணுங்கும்
இந்த இருசொல் கவிதைக்கு  
முடிவில்லாக் கவிதையின்
முற்றுப்புள்ளியா
அந்த அழகு நெற்றியில் கறுப்புப் போட்டு...?

தேவதைகள் மண்ணில் பிறப்பதில்லையாம்...!
ஆனால்  நானோ
தேவதைக்கே பிறந்தவன்!

என் கவிதைத் தாயவள்
கொஞ்சும்போதும்
கெஞ்சும்போதும்
எப்போதும் அழகு!
தள்ளிப்போடா என்று சினுங்கும்போதோ
பேரழகு!

இலையில் வழியும் ஒரு துளியில்
விரல் நனைக்க
மனம் நனையும் அந்த
அதிகாலை வேளையில் கூட
அவள் மடியில் தலைசாய்த்து
நானுறங்கிய நல்பொழுதுகள்...!

பத்துத் திங்கள்
பாரமாய் எனைச் சுமந்து
இவ்வுலகில் நான் உதிர்த்த  
முதற்சிரிப்பைக் கண்டவுடன்
தான் பெற்ற இன்னல்களை
என் கண்களில் மறைத்த
உன்னத உறவு அவள்!

உதிரத்தை உணவாக்கி
மனமகிழ எனக்களித்து
என் மழலைச் சொல்கேட்டு
தன் துயரம் தான் மறந்தத் 
தன்மையான பேருறவு அவள்!

நானுறங்கும்  வேளையிலே
எனைத் தாலாட்டித் தொட்டிலிட்டு
தன்னுறக்கம் தான் மறந்தத்
தியாகத் திருவுவே அவள் தாய்மை!

உலகமெல்லாம் ஒன்றாகி
எனைக் குற்றம் சாட்டினாலும்
குற்றத்தின் தண்டனையாய்த்
தூக்குமேடை ஏற்றினாலும்
ஒரு உள்ளம் வாதாடும்...
எனக்காகப் போராடும்...
அது தாய்மையெனும் அவள் திரு உள்ளம்!

என் தாயை எனைவிட்டுப் பிரித்த
தன்னிகரில்லாத இறைவன்  கூடத்
தாய்மை எனும்  திருவுளத்தைத்
தரணியை விட்டுப்  பிரிக்கமுடியாது...!

பார் முழுவதும்
பாவங்கள் பெருகினாலும்
பூமி பிழைத்திருக்கும்...
காரணம் என்னவென்றால் -
தாய்மை தழைத்து இருப்பதினால்!

தாயும் தமிழும் ஒன்றே
என்பார் தாரணி போற்றும்
திருப்புலவர் திருவள்ளுவர்!
தமிழ் கொண்டு என்தாயைப்
போற்றவேண்டியவனை
செந்தமிழ் கொண்டு அவள்பிரிவைப்
பாட வைத்தானே நல்லிறைவன்...!

கட்டிலில் கிடந்தாளை
கண் எனைப் பெற்றாளை
கண்ணிய மனத்தாளை
காலன்பின் சென்றாளை
கண்ணாடிப் பெட்டியில் புகுந்தாளை
கண்ணயரும் நேரத்தில் என்
கரம்கொண்டுக் காலனுக்குக்
கட்டியம் வைத்தேனே!

பெற்றெடுத்த பேழைகள்
சுற்றிநின்று கதறியழ 
பெரியோர் சிறியோர் எனச்
சுற்றமும் சூழ்ந்து நிற்க 
பெருமகனாம் எந்தன்
ஆருயிரைத் தந்தாளைப்
பெயர் சேர்த்துப்போற்றிப் பின்னே
வழியனுப்பி வைத்தேனே!

என்ன தவம் செய்தேனோ
இப்பிறப்பில் அவள் பொருந்தி
இன்னதெனச் செய்வது
அறியாது விழிபிதுங்கி
பந்தமும் சூழ்ந்துநிற்கப்
பந்தமுனைத் தீக் கொண்டு
பரதேசம் போவேன நான்
வழியனுப்பி வைத்தேனே!

இன்னபிற நாட்களில் நான்
தனியேன் எனத்  தானேகித்
தத்தளிக்கும் பொழுதுகளைச்
சந்தம் பாடி சப்தமிடத்
தமிழ்கொண்டு நானெழுதும்
விரலின் நுணி வாசமிதைத்
தந்து நிலைபுரியவைக்கத்
தமிழறிய வைத்தேனே!

தவிப்பேனே...!
தனி நிலையால் துடிப்பேனே...!
சிரியேனே...!
சுகமான சுமையதனைச்
சுற்றி வளர்ந்தேனே...!
சுற்றத்தில் பெருஞ்சூரியனைச்
சுகமளித்தத் தாயவளைத் தந்தேனே...!
சுட்ட தீச் சுனைஎடுத்துப் பின் கரைத்தேனே...!
கை பிரிந்தேனே!

மனம் தளர்ந்துப் போனாலும்
என்
விரல் தளரவில்லை...!
என் விரல் நுணி வாசம் மட்டும்
இனி என்றென்றும்
தொடர்ந்து கொண்டே இருக்கும்!

என் தாயை வாழ்த்த உதவிய தமிழே!
நீ வாழ்க! வாழ்க!
தாரணி உள்ளவரை நின் தாள்வணங்க
எம் தமிழர் என்றென்றும் வாழ்க!

1 comment:

  1. MIND BLOWING.. OUT OF THE WORLD
    SUPERB... IT TICKLES THE MIND & STRIKES THE CHORDS OF MY HEART.. THANK YOU FOR THE LOVELY WRITING TRIBUTE ON MOTHER GODESS. THE SUPREME.

    let the kind words keep flowing from your heart.

    WISH YOU & YOUR FAMILY THE VERY BEST & PROSPERITY IN LIFE.

    Best regards
    G.Sridhar

    ReplyDelete